காலைத் தியானம் – மே 5, 2020

1 இராஜா 22: 1- 6 

என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள்            

ஆகாப், சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத்துடன், கர்த்தருடைய விருப்பத்திற்கு மாறாக ஒரு உடன்படிக்கை செய்துகொண்டதை 1 இராஜாக்கள் 20: 34ல் பார்த்தோம். அந்த உடன்படிக்கையின் படி பெனாதாத் திரும்பக் கொடுக்க வேண்டிய பட்டணங்களை மூன்று வருடங்களாகியும் அவன் திரும்பக் கொடுக்கவில்லை. ஆகையால் ஆகாப் ராஜா சீரியாவுக்கு விரோதமாக யுத்தம் செய்ய முடிவு செய்கிறான். யோசபாத் கர்த்தருக்குப் பிரியமானபடி யூதாவை அரசாண்டு வந்தவன். அவன் அந்த யுத்தத்தில் தலையிடவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் ஆகாபுக்கு ஆதரவாக யுத்தத்தில் சண்டையிட ஒத்துக் கொள்ளுகிறான். அந்த சூழ்நிலையில் யோசபாத்திடமிருந்து ஆகாபுக்கு ஒரு நல்ல புத்திமதி கிடைக்கிறது. யுத்தத்திற்கு போகுமுன் முதலாவதாக கர்த்தருடைய வார்த்தையை விசாரித்து அவர் என்ன சொல்லுகிறார் என்பதை அறிந்துகொள்ளும் என்பதே அவன் சொன்ன புத்திமதி. நீ எதைச் செய்ய நினைத்தாலும் முதலாவதாக திறந்த மனதோடு உன் ஆண்டவரிடம் சென்று அவர் என்ன சொல்லுகிறார் என்பதைக் கேள். அவர் பரிசுத்த வேதாகமத்தில் இருக்கும் தமது வார்த்தையின் மூலமாகவோ அல்லது வேறே ஏதாவது ஒரு வழியிலோ தம்முடைய சித்தத்தை உனக்கு வெளிப்படுத்துவார்.                  

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய சித்தத்தைத் தெரிந்துகொள்ளாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடாதபடி என் வழிகளைக் காத்துக் கொள்ளும். ஆமென்.