காலைத் தியானம் – மே 16, 2020

2 இராஜா 2: 11 – 18

என் தகப்பனே, என் தகப்பனே 

மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று கர்த்தர் ஆதியாகமம் 2:18ல் சொல்லுவது, திருமணத்திற்கு மாத்திரமல்லாமல், ஊழியத்துக்கும் பொருந்தும். வேதாகமத்தில், மோசே – ஆரோன், பவுல் – பர்னபா, பவுல் – சீலா, எலியா – எலிசா என்று இரண்டு இரண்டு பேர்களாக சேர்ந்து ஊழியத்தில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம். இயேசு கிறிஸ்துவும் தம் சீடர்களை இரண்டு இரண்டு பேராக ஊழியத்துக்கு அனுப்பினார் என்பதை மாற்கு 6:11ல் பார்க்கிறோம்.  அப்படிச் செய்வது ஒருவருக்கொருவர் உதவியாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கும். மேலும் ஒரு தலைமுறைக்குப் பின் அடுத்தத் தலைமுறை மூலமாக ஊழியம் தொடரவும் அது மிகவும் அவசியமானது.  மோசேக்குப் பின் யோசுவா இஸ்ரவேலரை வழிநடத்தினான். பவுலுக்குப் பின் தீமோத்தேயு திருச்சபையின் தலைவனாகும்படி பவுலால் தெரிந்து கொள்ளப்பட்டான்.  பவுல் தீமோத்தேயுவைத் தன் மகன் என்று குறிப்பிட்டான். இங்கே எலிசா எலியாவைத் தன் தகப்பன் என்று அழைக்கின்றான். இரண்டு பேராக இணைந்து ஊழியம் செய்வதிலும், அடுத்தத் தலைமுறை தலைவர்களை உருவாக்குவதிலும் நாம் வேதாகமம் சொல்லிக்கொடுப்பதைப் பின் பற்றுகிறோமா?                                          

ஜெபம்

ஆண்டவரே, தனித்து இயங்காமல், இரண்டு பேராக இணைந்து ஊழியத்தில் ஈடுபடுவதின் அவசியத்தை எனக்கு உணர்த்தியதற்காக நன்றி சுவாமி. ஆமென்.