நெகே 2: 11 – 16
ராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்தேன்
நெகேமியாவின் சரித்திரத்தில், நிர்வாகம் (administration), மேலாண்மை (management) போன்றவற்றைக் குறித்த பாடங்கள் ஏராளம் உண்டு. கோட்டையைக் கட்டுவது ஒரு பிரமாண்டமான வேலை. ராஜாவின் அங்கீகரிப்பும் ஆதரவும் இருந்தும் நெகேமியா, தான் எருசலேமுக்கு வந்ததின் நோக்கத்தை வந்தவுடன் அறிக்கையிடவில்லை. முதலில், ஒரு சிலரை மாத்திரம் வைத்துக் கொண்டு உடைந்து கிடக்கும் கோட்டையை நேர் பார்வையிடுகிறார். அதற்குப் பின், தான் கண்டவைகளையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு ஒரு பெரிய திட்டத்தையும், உத்தி அல்லது உபாயத்தையும் (strategy) உருவாக்குகிறார். பிறர் சொல்வதை வைத்துத் திட்டம் உருவாக்கவில்லை. நெகேமியா உடைந்து கிடந்த அலங்கத்தை (அல்லது கோட்டையை) இரகசியமாக இரவில் பார்வையிட்டதற்கு வேறு சில காரணங்களும் இருந்திருக்கலாம். ஒருவேளை, எடுத்தவுடன் தன் மனதில் இருக்கும் குறிக்கோளை அவர் சொல்லியிருந்தால், யூதர்களுக்குள்ளேயே பலவிதமான கருத்து வேறுபாடுகள் வந்திருக்கலாம். சரியான திட்டம் உருவாகும்வரை எதிரிகளுக்கு எதுவும் தெரியாமல் இருப்பது நல்லது என்றும் அவர் நினைத்திருக்கலாம். நாம் கர்த்தர் நமக்குக் கொடுத்துள்ள அறிவையும் ஞானத்தையும் உபயோகப்படுத்த வேண்டும். கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லிவிட்டு முட்டாள்தனமாக செயல்படக் கூடாது.
ஜெபம்
ஆண்டவரே, நீர் கொடுத்துள்ள ஞானத்தை எல்லா சூழ்நிலைகளிலும் உபயோகிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.