காலைத் தியானம் – செப்டம்பர் 07, 2020

நெகே 4: 17 – 23       

நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ. . .

வேலை செய்ய ஒரு பகுதியினர், பாதுகாக்க இன்னொரு பகுதியினர் என்று நெகேமியா மக்களைப் பிரித்திருந்தார். இருந்தும் மக்களெல்லாரும் பட்டணத்தைச் சுற்றியுள்ள அலங்கத்தின் மேல் சிதறப்பட்டு ஒருவருக்கொருவர் தூரமாயிருந்தார்கள் (வசனம் 19). எதிரிகள் எந்த திசையிலிருந்து வருவார்கள் என்று தெரியாது. ஆகையால் நெகேமியா ஒரு திட்டம்போடுகிறார். எக்காளம் ஊதுகிறவன் ஒருவன் நெகேமியாவோடு இருப்பான். எதிரிகள் வருகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பை நெகேமியா எடுத்துக் கொண்டார். எதிரிகள் வந்தால் எக்காள சத்தம் கேட்கும்; எக்காள சத்தம் கேட்டால், எல்லாரும் சத்தம் வரும் திசையை நோக்கி ஓடிவர வேண்டும். அப்படி வந்து, எதிரிகளோடு யுத்தம்பண்ணி அவர்களை விரட்டிவிட வேண்டும் என்பதுதான் நெகேமியாவின் திட்டம். நெகேமியா எக்காளத்தை  உபயோகித்ததாக நமக்கு சொல்லப்படவில்லை. ஆனால் நிச்சயமாக நெகேமியாவின் திட்டமும் செயலும் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கும். நீ எப்படிப்பட்ட தலைவன்? உன்னுடன் வேலை செய்கிறவர்களின் நலனுக்காக நீ முன் நிற்கிறாயா?

ஜெபம்

ஆண்டவரே, என் சக ஊழியர்களின் நலனுக்காக உழைக்கும் மன உறுதியை எனக்குத் தாரும். ஆமென்.