நெகே 8: 13 – 18
ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும்
கூடாரப் பண்டிகை யூதர்களுக்கு ஒரு முக்கியமான பண்டிகை. கர்த்தர் மோசேயின் மூலமாக இந்த பண்டிகையை ஏற்படுத்தினார். இதைக் குறித்து லேவியராகமம் 23: 33-44 வரையுள்ள வேத பகுதியில் வாசிக்கலாம். கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த போது அவர்களைக் கூடாரங்களிலே தங்க வைத்து ஒவ்வொரு அடியாக வழிநடத்தினதை அவர்களுடைய சந்ததியார் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே கூடாரப் பண்டிகை ஏற்படுத்தப்பட்டது. எந்த பண்டிகையையும் புதுத் துணிகளை உடுத்தி, நல்ல உணவு உண்ணும் நேரம் என்று மாத்திரம் நினைத்துவிடக் கூடாது. பண்டிகையின் நோக்கத்தை அறிந்து அதை நினைவுகூர வேண்டும். பூர்வ நாட்களையும், கர்த்தர் இந்நாள் வரை நம்மை நடத்தி வந்துள்ள விதத்தையும், கர்த்தர் நம் வாழ்க்கையில் செய்துள்ள அற்புதங்களையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அவைகளை நம் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஜெபம்
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி. என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி. அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. ஆமென்.