காலைத் தியானம் – நவம்பர் 03, 2020

யோபு 4: 12 – 21                                                    

ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது        

எலிப்பாஸ் தன்னுடைய குற்றச்சாட்டுக்கு இரண்டு ஆதாரங்களைக் கொடுக்கிறான். முதல் ஆதாரம் இன்று வாசித்த பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆதாரம்தான் எலிப்பாஸ் கண்ட தரிசனமும் கேட்ட மெல்லிய சத்தமும். எலிப்பாஸ் கேட்டது கர்த்தரின் சத்தமா என்பது நமக்குத் தெரியவில்லை. பழைய ஏற்பாட்டில் கர்த்தர் மனிதனிடம் பேசியபோதெல்லாம், ”கர்த்தர் சொல்லுகிறார்” அல்லது “கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று” போன்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இன்று வாசித்த பகுதியில் அப்படி ஒன்றும் சொல்லப்படவில்லை.  ஆகையால் இந்த வார்த்தைகளும் தரிசனமும், குழப்பத்தில் இருந்த எலிப்பாசின் கனவாகக் கூட இருக்கலாம். மேலும் மனிதன் ஒருவனும் தேவனைப் பார்க்கிலும் நீதிமானில்லை என்பது உண்மையென்றாலும், தேவனுடைய நீதியைப் பற்றி பேசும் எலிப்பாஸ் அவருடைய இரக்கத்தைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை.  மனிதன் புழுதிக்கு ஒப்பானவன் என்று சொல்லும் எலிப்பாஸ், மனிதன் தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டவன் என்பதைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. உன் மனதில் தோன்றும் எல்லா வார்த்தைகளையும் கர்த்தருடைய வார்த்தை என்று நினைத்துவிடாதே.                

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய வார்த்தைகளையும் சத்தத்தையும் பகுத்துணரும் ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.