காலைத் தியானம் – நவம்பர் 06, 2020

யோபு 5: 17 – 27                                                  

தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்       

கர்த்தர் நம்மை ஒழுக்கப்படுத்தும்படி நம் வாழ்க்கையிலும் சில துன்பங்களை அனுமதிக்கலாம். அதை நாம் உணர்ந்து, நம் வாழ்க்கையில் சரிசெய்யவேண்டிய காரியங்களைச் சரிசெய்துவிட்டால் நாமும் பாக்கியவான்கள் தான். நான் மற்றவர்களைப் பார்க்கிலும் பரிசுத்த வாழ்க்கைதானே வாழ்கிறேன் என்று நம்மை நாமே மெச்சிக்கொண்டு இருந்துவிடக்கூடாது. நம்முடைய அளவுகோல் மற்ற மனிதருடைய பரிசுத்தம் அல்ல. நம்முடைய அளவுகோல் கர்த்தருடைய பரிசுத்தம்.  கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே, நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக என்ற கர்த்தருடைய வார்த்தையை லேவியராகமம் 20:26ல் பார்க்கிறோம். லேவியராகமம் 11:45, 19:2, 1 பேதுரு 1:16 போன்ற வசனங்களிலும் இதே கட்டளையைப் பார்க்கிறோம். எல்லா துன்பங்களும் நம்முடைய பாவத்தின் விளைவாக வருவதில்லை. இருந்தாலும், துன்பங்களைக் கடந்து செல்லும் நாட்களில் நாம் சீர்ப்படுத்த வேண்டிய குணங்கள் அல்லது பழக்கவழக்கங்கள் ஏதாவது நம்மிடம் உண்டா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்பதே புத்திசாலித்தனம்.             

ஜெபம்

ஆண்டவரே, அனுதினமும் நான் உமக்கேற்ற பரிசுத்தத்தை நோக்கி வளர எனக்கு உதவி செய்யும். ஆமென்.