காலைத் தியானம் – நவம்பர் 11, 2020

யோபு 8: 11 – 22                                                

அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்    

கர்த்தர் நீதியுள்ளவர் என்று ஆரம்பித்த பில்தாத், யோபுவின் மீது தான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக இயற்கையில் காணப்படும் காரணங்களுக்கும் விளைவுகளுக்குமுள்ள தவிர்க்கமுடியாத தொடர்பை (inescapable relationship between cause and effect) எடுத்துக் கூறுகிறான். சேறில்லாத நாணலும் தண்ணீரில்லாத கோரைப் புல்லும் எப்படி செழித்திருக்கமுடியாதோ அப்படியே கர்த்தரை மறந்து வாழ்கிற மனிதனுடைய வாழ்க்கையிலும் இந்த பூலோக ஆசீர்வாதம் மறைந்துவிடும் என்று சொல்கிறான்.  மேலும் யோபு கர்த்தரை விசுவாசிக்காமல் தன் நம்பிக்கையை வேறே எதின்மீதோ வைத்துவிட்டான் என்றும் அப்படிப்பட்ட நம்பிக்கை வலிமையில்லாத சிலந்திப்பூச்சியின் வீட்டின்மீது வைத்த நம்பிக்கையைப் போலிருக்கிறது என்றும் சொல்லுகிறான்.  யோபுவின் வாழ்க்கையைப் பொறுத்தவரை இவை அனைத்தும் அவனுடைய நண்பர்களின் கற்பனை என்பது நமக்குத் தெரியும். ஒருவேளை உன்னுடைய வாழ்க்கையில், சிலந்திப்பூச்சியின் வீட்டைப் போல உறுதியற்ற எதின்மேலாவது நம்பிக்கையை வைத்திருக்கிறாயா என்று யோசித்துப் பார்.        

ஜெபம்

ஆண்டவரே, நிலையில்லாத எந்த பொருளின் மீதும் அல்லது மனிதரின் மீதும் நான் என் விசுவாசத்தை வைத்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.