காலைத் தியானம் – ஏப்ரல் 27, 2021

ஆமோஸ் 7: 7 – 14               

அவர் கையில் தூக்குநூல் இருந்தது                 

தூக்குநூல் என்பது கட்டிட வேலை செய்யும் தொழிலாளிகள் ஒரு சுவரைக் கட்டும்போது அதின் பக்கம் நேராகவும் சீராகவும் இருக்கிறதா என்பதைச் சரி பார்க்க உபயோகப்படுத்தும் ஒரு சிறிய கருவி. ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு செங்கல்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்துக் கட்டியவுடன், கட்டிட தொழிலாளி தூக்குநூலை வைத்து அத்தனை வரிசைகளும் சீராக இருக்கின்றனவா என்று பார்ப்பான். இல்லையென்றால் கோணலான இடங்களில் செங்கற்களைத் தட்டி, நேராக்கி, சுவர் சீராக இருப்பதை உறுதிசெய்வான். கர்த்தருடைய வார்த்தை அடங்கிய வேதாகமம் தான் நம் வாழ்க்கைக்குத் தூக்குநூல். நம் வாழ்க்கை சீராக இருக்கிறதா அல்லது பாவம் அதைக் கோணலாக்கிவிட்டதா என்பதை அந்த தூக்குநூல் காட்டும். கர்த்தர் கையிலிருக்கும் அந்தத் தூக்குநூலினால், அவர் நம்முடைய வாழ்க்கையை அளக்கும்போது நம்முடைய நிலை என்ன?

ஜெபம்

ஆண்டவரே, என் வாழ்க்கை உம்முடைய தூக்குநூலுக்கு முன்பாக சீரானதாக இருக்கும்படி உமது கிருபையால் என்னை வழிநடத்தும். ஆமென்.