காலைத் தியானம் – டிசம்பர் 07, 2021

மத் 2: 13 – 23

எகிப்துக்கு ஓடிப்போய் . . . அங்கே இரு              

                                      சர்வ வல்லமை நிறைந்த, உலகையே உருவாக்கின இரட்சகரோடு அவரது பூலோகத் தாயும் அவரை வளர்க்கும் தகப்பனும் ஏரோதுவுக்குப் பயந்து எகிப்துக்கு ஓடவேண்டுமா? கர்த்தர் ஒரு நொடிப்பொழுதில் ஏரோதை அழித்திருக்கலாமே! மூடியும், ஆனால் அப்படி அழிப்பது அவருடைய சித்தமாயிருக்கவில்லை. கிறிஸ்து மனு உருவேற்பதற்கு கிட்டத்தட்ட 700 வருடங்களுக்கு முன்னதாகவே ஓசியா தீர்க்கதரிசி “எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன்” (ஓசியா 11:1) என்று தீர்க்கதரிசனம் சொன்னதிலிருந்து இதெல்லாமே கர்த்தருடைய முன்னேற்பாடு என்பது தெளிவாகிறது. யோவான் 8:44ல் பிசாசானவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஏரோதின் மூலமாக, அவன் இரண்டு வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளைக் கொன்ற போதும் அதைத்தானே நிரூபித்தான். இயேசு இப்பூமிக்குப் பாலகனாக வந்த நேரத்திலிருந்து எப்படியாவது அவரை அழித்துவிட வேண்டும் என்பதில் பிசாசானவன் குறியாக இருந்தான். ஆனால் கர்த்தருக்கு முன் பிசாசானவன் எம்மாத்திரம்? உன் வாழ்க்கையிலும் சாத்தான் ஏற்படுத்தும் தற்காலிகத் தொந்தரவுகளைப் பார்த்து சோர்ந்து போகவேண்டாம். சாத்தானிடமிருந்து தப்பிக்கும்படி ஓடி ஒளிய வேண்டிய தருணங்கள் ஏற்பட்டால், கர்த்தர் ஏன் என்னைக் கைவிட்டுவிட்டார் என்று நினைக்கவேண்டாம். கர்த்தருடைய சித்தமும் திட்டமும் நிச்சயமாக நிறைவேறும்.                           

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய வேளைக்காகக் காத்திருக்கும் பொறுமையையும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் பெலனையும் எனக்குத் தாரும். ஆமென்.