காலைத் தியானம் – டிசம்பர் 15, 2021

மத் 4: 18 – 25

உடனே அவர்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின்சென்றார்கள்        

                                     என் பின்னே வாருங்கள், உங்களை மனிதரைப் பிடிக்கிறவர்கள் ஆக்குவேன் என்று இயேசு சொன்னதற்கு முழு அர்த்தம் என்ன என்று பேதுருவுக்கும் அந்திரேயாவுக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், அவர்கள் செய்துகொண்டிருந்த வேலையைவிட மேலான ஒரு வேலைக்காக அழைக்கப்பட்டார்கள் என்பது தெரிந்திருக்கும். இருந்தாலும் பேதுருவுக்கும் அந்திரேயாவுக்கும் முன் இருந்த சவாலைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.  அவர்கள் தங்களுக்குத் தெரிந்த தொழில், தங்களுடைய திறமையின் மீதிருந்த நம்பிக்கை, வசதியான வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதாரம் போன்றவைகளையெல்லாம் விட்டுவிட்டு இயேசுவுக்குப் பின் சென்றார்கள்.  உலகப்பிரகாரமான செல்வத்தையும் வசதிகளையும் விட்டுவிட்டு பேதுருவையும் அந்திரேயாவையும் போல இயேசுவுக்குப் பின் சென்றவர்கள் சரித்திரத்தில் அநேகர் உண்டு. அவர்களுக்கும் பலவிதமான கேள்விகள் இருந்திருக்கக் கூடும். சாப்பாட்டுக்கு என்ன வழி? குடும்பத்தை யார் கவனிப்பது? தொலைநோக்குடன் யோசித்தால் இது ஞானமான முடிவா? இப்படிப்பட்ட சவால்களையெல்லாம் தாண்டி, கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தவர்களுக்கு எந்த குறைவும் இருந்தது இல்லை. நீயும் இயேசுவின் அழைப்புக்குக் கீழ்ப்படிய தயாரா?                       

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய அழைப்புக்குக் கீழ்ப்படிய எனக்கு மன உறுதியைத் தாரும். ஆமென்.