காலைத் தியானம் – டிசம்பர் 16, 2021

மத் 5: 1 – 3

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் அவர்களுடையது       

                                     மத்தேயு 5:1-12 வசனங்களை தங்க வசனங்கள் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் beatitudes என்று சொல்லப்படும் இந்த வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள். இவை, கிறிஸ்துவைப் பின்பற்றும் பரலோகராஜ்யத்தின் பிள்ளைகளாகிய நமக்கு மிகவும் முக்கியமானவை. நம் வாழ்க்கையில் இந்த நெறிகள் பிரகாசிக்கவேண்டும். பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று யோவானும் இயேசுவும் பிரசங்கித்தார்கள். அந்த பரலோகராஜ்யத்தின் ராஜா இயேசுதானே! இயேசுவை நன்றாக அறிந்திருந்தால் உன்னிடமும் பரலோகராஜ்யத்தின் நெறிகள் காணப்படவேண்டும். “என்னால் எதையும் செய்யமுடியும்” என்ற சுயநம்பிக்கை உனக்கு வேண்டும் என்று உலகம் போதிக்கிறது. கர்த்தருடைய கிருபையும் உதவியும் இருந்தால் மாத்திரம் நீ எதையும் செய்யமுடியும் என்று பரிசுத்த வேதாகமம் போதிக்கிறது. சுயத்தின் மீதும் செல்வத்தின் மீதும் நம்பிக்கை வைக்கிறவர்களிடத்தில் ஆவியின் எளிமையைப் பார்க்கமுடியாது. ஆவியின் எளிமை என்பது வெளிப்புற தோற்றமல்ல. அது உண்மையான, உள்ளான மனத்தாழ்மை.                       

ஜெபம்:

ஆண்டவரே, என்னுடைய மனத்தாழ்மை உமக்குப் பிரியமானதாக இருப்பதாக. ஆமென்.