காலைத் தியானம் – பிப்ரவரி 12, 2022

மத் 18: 1 – 5

பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால்

                               சிறு பிள்ளைகளுக்குள் நான் பெரியவனா அல்லது நீ பெரியவனா என்ற கேள்விக்கு இடமேயில்லை. பணக்காரன் ஏழை என்ற வித்தியாசமில்லை. சிறு பிள்ளைகள் சில நிமிடங்கள் ஒன்றாக இருந்தால் போதும், எந்த வித்தியாசத்தையும் பொருட்படுத்தாமல் எல்லாரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். பெரியவர்களாகிய நாம்தான், சிறு பிள்ளைகள் வளர்ந்து வரும்போது, அவனுடன் சேராதே, இவளுடன் சேர்ந்து விளையாடாதே என்று பிள்ளைகளின் மனதில் பலவிதமான வேறுபாடுகளை உருவாக்கிவிடுகிறோம். உயர்வு, தாழ்வு என்ற எண்ணங்களே இல்லாத தாழ்மையையும் ஒற்றுமையையும் நாம் சிறு பிள்ளைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சிறு பிள்ளைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு பாடம், மறந்து மன்னிக்கும் சுபாவம். ஒருவருக்கொருவர் எப்படி சண்டை போட்டிருந்தாலும், சில நிமிடங்களில் அதை முற்றிலும் மறந்து மறுபடியும் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். நாம், “நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்களுக்கு மன்னியும்” என்று ஜெபிக்கிறோம். ஆனால் யாரையும் மன்னிப்பதுமில்லை, சிறு தவறுகளைக் கூட மறப்பதுமில்லை. சிறு பிள்ளைகளைப் போலாகாவிட்டால் பரலோக அரசாட்சியில் உனக்கு இடமில்லை என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்லுகிறார்.

ஜெபம்:

ஆண்டவரே, மனத்தாழ்மையையும் மன்னிக்கும் சுபாவத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.