காலைத் தியானம் – பிப்ரவரி 18, 2022

மத் 19: 16 – 19

நல்ல போதகரே . . .  

                               ஒரு காலத்தில் உலக அறிவையும் ஞானத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் கடல் கடந்து, கப்பல்களில் பயணம் செய்து பல நாடுகளுக்குச் சென்று அனுபவத்தின் மூலம் அவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது. நாளடைவில் பயணம் செய்யாவிட்டாலும், மற்றவர்களின் அனுபவத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட புத்தகங்களை வாசிப்பதின் மூலமாக அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது. நல்ல ஆசிரியர்கள் அல்லது போதகர்கள் மூலமாக அறிவையும் ஞானத்தையும் வளர்த்துக்கொள்ளும் முறையும் பல்லாயிர வருடங்களாக இருந்து வருகிறது. அப்போஸ்தலர் 22:3ல் பவுல் தன்னுடைய கடந்த காலத்தைக் குறித்துப் பேசும்போது, கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்தவன் என்பதைத் தன் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஆதாரமாகக் கூறுகின்றார். இன்று நாம் பல நிலைகளைத் தாண்டி கணினி மற்றும் இணையதள யுகத்துக்கு வந்துவிட்டோம். இருந்தாலும், அன்றும் இன்றும் நம்முடைய ஆண்டவருக்கு இணையாக ஒரு போதகரும் இல்லை. அவரே நல்ல போதகர். உன்னுடைய போதகர் – சீடன் உறவு எப்படி இருக்கிறது?

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய பாதத்தருகே இருந்து ஞானத்தையும் அறிவையும் அனுதினமும் பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தைத் தாரும். ஆமென்.