காலைத் தியானம் – ஜூலை 31, 2022

லூக்கா 11: 27 – 36

சாலொமோனிலும் பெரியவர் . . . யோனாவிலும் பெரியவர்

                    சாலொமோன் மிகவும் புகழ்பெற்ற, மதிக்கப்பட்ட ஒரு அரசன்.  சாலொமோனின் ஞானத்தைப் பற்றி கேள்விப்பட்ட சேபாவின் ராணி, வெகு தூரம் பிரயாணம் செய்து அவரைப் பார்க்க வந்துவிட்டாள். ஆனால் தங்களுடனேயே இருந்த, சாலொமோனைவிடப் பெரியவரான இயேசுவை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு அடையாளத்தைச் செய்துகாட்டி, நீர் மேசியா என்பதை நிரூபித்துக் காட்டும் என்றார்கள். சாத்தான் கூட, நீர் தேவனுடைய குமாரனேயானால்  இந்தக் கல் அப்பமாகும்படி செய்யும் என்றான். சாத்தானுக்கு, இயேசு தேவனுடைய குமாரன் என்பது நன்றாகத் தெரியும். இருந்தும் அதை ஏற்றுக்கொள்ளாத, தன் நிலையை நியாயப்படுத்துவது போல கேள்வி கேட்கிறான். உன் நிலையும் அப்படிப்பட்டதுதானோ? ஆலயத்திற்கு போகிறவர்களில் அநேகர் இருதயத்தில் சுத்தம் இல்லாதவர்கள். ஆகையால் நான் ஏன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்று கேட்கிறவர்கள் நம்மில் எத்தனை பேர்?

ஜெபம்:

ஆண்டவரே, எல்லாவற்றிலும் குறைகளைக் கண்டுபிடித்து, என் நிலையை நியாயப்படுத்தும் என் கோணலான புத்தியைச் செம்மைப்படுத்தும். ஆமென்.