காலைத் தியானம் – ஜூலை 01, 2022

லூக்கா 6: 1 – 11

மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் 

                      இயேசுகிறிஸ்து, மோசேயின் மூலம் இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணங்களை உடைத்துப்போடும்படி பூமிக்கு வரவில்லை. அவர் அவற்றை முற்றிலுமாக நிறைவேற்றவே வந்தார். பரிசேயரோ, வேதத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் வேலைக்கும் ஓய்வுநாளுக்குமிடையே தேவையற்ற இடைவெளியை உண்டாக்கிவிட்டார்கள். ஓய்வுநாள் மட்டுமே தூய்மையான நாள் போலவும், மற்ற நாட்களெல்லாம் தூய்மையற்ற நாட்கள் போலவும் செயல்பட்டார்கள். ஓய்வுநாள் ஆசரிப்பில் கண்டிப்பானவர்களாயிருந்த போதிலும், பரிசேயர் உள்ளத்தில் தூய்மை காணப்படவில்லை. பரிசேயருக்கு ஓய்வுநாள், ஓய்வுநாளை உண்டாக்கிய ஆண்டவரை விட முக்கியமாயிருந்தது. இன்றும் நாம் பாரம்பரியங்களைப் பிடித்துக் கொண்டு கிறிஸ்துவை விட்டுவிடுகிறோமோ?

ஜெபம்:

ஆண்டவரே, மனிதன் உருவாக்கிய பாரம்பரியங்கள் என்னை உம்மிடமிருந்து விலக்கிக் கொண்டுபோய்விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும்.  ஆமென்.