காலைத் தியானம் – ஜூன் 01, 2023

ரோமர் 6: 1 – 7

பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று    

                        தம் குடிமக்களையே அடிமைகளாக நடத்தும் ஒரு சர்வாதிகாரியின் நாட்டில் வாழ்ந்துவந்த ஒருவனுக்கு, ஒரு சுதந்திரமான ஜனநாயக நாட்டில் வாழும் வாய்ப்பு கிடைத்துவிட்டால், அங்கும் தன்னை அடிமையாக நடத்தும் ஒரு சர்வாதிகாரியைத் தேடுவானோ? புதிய நாட்டில் அவனுக்குக் கிடைத்த சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கத்தானே முயற்சிசெய்வான். அதுபோல, பாவ (அடிமைத்தன) வாழ்க்கையிலிருந்து மீட்கப்பட்டு தேவகிருபையை உண்மையில் ருசித்த யாரும், நான் அதிகம் பாவம் செய்தால் தேவகிருபை எனக்கு அதிகமாகக் கிடைக்கும்; ஆகையால் நான் பாவம் செய்துகொண்டே இருப்பேன் என்று நினைக்கமுடியாது. ஒருவன் தன் பாவ வாழ்க்கைக்காக உண்மையாக வருந்தி, மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவால் கழுவப்பட்டு, பாவ மன்னிப்பைப் பெறும்போது அவன் ஒரு புது சிருஷ்டியாகிவிடுகிறான். அவன் மறுபடியும் பிறந்தவனாகிவிடுகிறான். பாவ அடிமைத்தனத்தை திரும்பிப் பார்க்கும் விருப்பம் இருக்காது. அதற்கு அடையாளமாகத் தானே, ஞானஸ்நானத்தில் தண்ணீரில் மூழ்கும்போது பாவத்திற்கு மரித்துவிட்டேன் என்றும், வெளியே வரும்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக புதிய மனிதனாக மாற்றப்பட்டு விட்டேன் என்றும் அறிக்கையிடுகிறோம்!  உனக்கு தேவனுடைய கிருபையை ருசித்த உண்மையான அனுபவம் உண்டா? இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை அனுபவித்தவன், அதிகமாக பாவம் செய்வதால் அதிகமாய் தேவனுடைய கிருபையைப் பெறுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அடிமைத்தன வாழ்க்கையில் தொடரமுடியாது.                            

ஜெபம்:

என் அன்பு தகப்பனே, நீர் எவ்வளவு பெரிய விடுதலையை எங்களுக்காகப் பெற்று தந்திருக்கிறீர். அதை நாங்கள் சரியாய் புரிந்துகொண்டு விடுதலையோடு அனுதினமும் வாழ கிருபை செய்யும். ஆமென்.