காலைத் தியானம் – ஜூன் 05, 2023

ரோமர் 7: 1 – 6

நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்தினின்று விடுதலை   

                        நியாயப்பிரமாணம், கர்த்தர் எதிர்பார்க்கும் பரிசுத்த நிலையை மனிதனுக்கு வெளிப்படுத்தும்படி, கர்த்தரால் மனிதருக்குக் கொடுக்கப்பட்டதுதான். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் மாத்திரமே அந்த பரிசுத்த நிலையை அடைய முடியும். மனிதனோ கர்த்தரை ஒதுக்கி வைத்துவிட்டு அவர் கொடுத்த நியாயப்பிரமாணத்தையே கடவுளாக்கிவிட்டான். நியாயப்பிரமாணம் மனிதனைக் கட்டிப்போட்டு விட்டது. கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள திருமண உறவு அவர்கள் இருவரும் உயிரோடு இருக்கும்வரை அவர்களை இணைத்துக் கட்டும் பந்தம். இருவருள் ஒருவர் மரித்தால் அந்த பந்தத்திலிருந்து அடுத்த நபர் விடுவிக்கப் படுவது போல, நாமும் நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களாகி நியாயப்பிரமாணத்தின் கட்டிலிருந்து விடுதலைப் பெற்று, இயேசு கிறிஸ்துவால் அவருடைய மணவாட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம். இப்பொழுது நாம் நியாயப்பிரமாணத்தினாலே அல்ல, பரிசுத்த ஆவியானவராலே அனுதினமும் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தப்படுகிறோம். பரிசுத்த ஆவியானவரோடு உள்ள உங்கள் உறவு எப்படி இருக்கிறது?                   

ஜெபம்:

என் அன்பு தகப்பனே, நீர் எங்களுக்குக் கற்று தரும் ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்ளும்படி எங்கள் மனக்கண்களைத் திறந்தருளும். ஆமென்.