காலைத் தியானம் – ஏப்ரல் 02, 2020

1 இராஜா 16: 7- 20

பாஷா தன் கைகளின் செய்கையால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கி

யெரொபெயாமின் வாழ்க்கை கர்த்தருக்கு அருவருப்பாக இருந்தது. அவனுடைய பாவ வாழ்க்கையும், அவன் தன் ஆட்சியின் கீழ் இருந்த மக்களைப் பாவத்திற்குள் வழி நடத்தினதையும் கர்த்தர் வெறுத்தார். யெரொபெயாமின் சந்ததியில் ஒருவனும் இல்லாதபடி எல்லாரையும் அழித்துப் போட்டார். அப்படி அழிப்பதற்கு பாஷாவை உபயோகித்தார். ஆனால் கர்த்தர் பாஷாவைத் தெரிந்து கொண்டதின் பிரதான நோக்கம் யெரொபெயாமின் சந்ததியை அழிப்பது அல்ல.  பாஷா கர்த்தருடைய பார்வைக்குப் பிரியமானதைச் செய்து, தாவீது வாழ்ந்து காட்டிய வழியில் நடக்கவேண்டும் என்பதற்காகவே கர்த்தர் பாஷாவை ராஜாவாக்கினார்.  அவனோ, யெரொபெயாமின் வழியிலே நடந்தான். கர்த்தர் உன்னையும் பல இடங்களிலும் அல்லது ஊழியங்களிலும் உபயோகிக்கலாம். ஆனால் அதுவே உன் வாழ்க்கையின் பிரதான நோக்கம் என்று நினைத்து விடாதே.

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய பார்வைக்குப் பிரியமானவைகளைச் செய்து, நீர் காட்டும் வழிகளில் செல்வதே என் வாழ்க்கையின் பிரதான நோக்கமாயிருக்கட்டும் சுவாமி.  ஆமென்.