காலைத் தியானம் – ஏப்ரல் 04, 2020

1 இராஜா 17: 1- 6

உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன்

ஒரு சில மாதங்களுக்குள் உலகெங்கும் கொரோனா கிருமிகள் பரவி உலகையே மிரட்டிக் கொண்டிருக்கின்றன. பல ஊர்கள் மற்றும் நாடுகள் முடங்கிக் கிடக்கின்றன. எங்கு பார்த்தாலும் பயமும், திகிலும் காணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனிதன் தன்னுடைய அறிவையும் திறமைகளையுமே  நம்புவது போல தோன்றுகிறது. ஆண்டவரை நோக்கித் திரும்புகிறவர்கள் ஒரு சிலரே. 1 இராஜாக்கள் புத்தகத்தில் தொடர்ந்து பாவத்தையும் அழிவையும் குறித்தே வாசித்துக் கொண்டிருந்த நம் முன் திடீரென ஆண்டவரை நோக்கிப் பார்த்து வாழ்கிற எலியா தீர்க்கதரிசி தோன்றுகிறான்.  எலியாவின் வாழ்க்கை நமக்கு ஒரு புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. எலியாவுக்கு காகங்களின் மூலமாக உணவளித்த கர்த்தர் நம்மைக் கைவிட மாட்டார். உலகப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் எந்த மோசமான நிலைக்குப் போனாலும் நாம் திகிலடைய வேண்டியதில்லை. ஆண்டவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியும்படி அநேகக் காகங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

ஜெபம்

ஆண்டவரே, நான் உம்மையே விசுவாசிக்கிறேன். எந்த சூழ்நிலையும் என்னைப் பாதிக்காதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.