காலைத் தியானம் – ஏப்ரல் 06, 2020

மாற்கு 12: 35- 40; சங்110: 1

கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார்

இயேசு கிறிஸ்து யார்? அவர் யாருடைய குமாரன்? தாவீதின் குமாரன் என்று வேதாகமத்தில் அவரைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதே, அப்படியென்றால் சுமார் 2020 வருடங்களுக்கு முன், தாவீதின் வம்சத்தில் வந்த யோசேப்புக்கு மனைவியாகும்படி நியமிக்கப்பட்டிருந்த கன்னிமரியாளிடத்தில் பிறந்தது தான் இயேசுவின் ஆரம்பமா? அவருக்கும் நம்மைப் போல ஒரு ஆரம்பம் உண்டா? கிறிஸ்து யார் என்பதை அறியாத பலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். இயேசு பூமியில் மனிதனாக உருவெடுத்து வாழ்ந்த நாட்களில். அவரை கிறிஸ்து என்று ஏற்றுக் கொண்ட பலருக்கும் அதே குழப்பம்தான். ஆகையால் தான் இயேசு, தாவீது பரிசுத்த ஆவியினாலே (சொந்த அறிவினாலே அல்ல) சொன்னதை (சங் 110:1) நினைவு படுத்துகிறார். சங்கீதம் 110: 1ல் கர்த்தர் என்பது பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது. ஆண்டவர் என்பது குமாரனாகிய இயேசுவைக் குறிக்கிறது. ஆங்லத்தில், “The LORD says to my Lord” என்று சொல்லப்பட்டிருக்கிறது.  Capital எழுத்துக்களில் LORD என்று எழுதுவது யெகோவா என்ற எபிரேய பெயரைக் குறிக்கிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனுக்கு ஆரம்பமுமில்லை, முடிவுமில்லை.

ஜெபம்

ஆண்டவரே, நீர் யார் என்பதை அறிவுப் பூர்வமாக மாத்திரமல்ல, அனுபவப் பூர்வமாகவும் அதிகமாய்த் தெரிந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.