மாற்கு 13: 1- 13
நானே கிறிஸ்து என்று சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள்
இன்னும் நானே கிறிஸ்து என்று சொல்லும் அந்திக் கிறிஸ்துக்கள் நமக்குத் தெரிந்த வரை வெளியே வரவில்லை. ஆனால். அநேகரை வஞ்சிக்கும்படி வேதத்தைப் புரட்டுகிறவர்களும், கர்த்தர் என்னிடம் சொன்னார் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் மீது அக்கறை கிடையாது. தாங்கள் பிரபலமடைவதும், பணம் சேர்ப்பதும் தான் இவர்களுடைய குறிக்கோள். இயேசு கிறிஸ்துவை அறியாதவர்கள் அவரிடம் வருவதற்கு இப்படிப்பட்ட வஞ்சகக் காரர்கள் மிகப்பெரிய தடையாயிருக்கிறார்கள். யூதாஸ்காரியோத்து என்னும் சீஷனும் பணத்தின் மீதே குறியாயிருந்தபடியால்தான் இயேசுவுக்கு விரோதமாகத் துரோகம் செய்யத் துணிந்தான். பணம், பணம் என்றே எப்பொழுதும் நினைத்துக் கொண்டு உன் நேரத்தையெல்லாம் வீணாக்காதே. அடிக்கடி பணத்தைக் கொடு, பணத்தைக் கொடு என்று கேட்பவர்களின் போதனைகளைக் குறித்து கவனமாயிரு.
ஜெபம்
ஆண்டவரே, வஞ்சிப்பவர்களின் வலையில் நான் சிக்கிக் கொள்ளாதபடி, வஞ்சனை செய்கிறவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் பகுத்தறிவை எனக்குத் தாரும். ஆமென்.