காலைத் தியானம் – ஏப்ரல் 08, 2020

மாற்கு 14: 1- 21

அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில்

ஆங்கில வேதாகமத்தில், while they were reclining at the table என்று சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுவும் அவருடைய சீஷர்களும் சாப்பிடும்படி சாய்ந்திருந்தார்களாம்! அந்த நாளில் ஒவ்வொருவருடைய மன நிலையையும் கவனியுங்கள். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அன்றைய தேவாலயத்தின் பேராயரும், குருமார்களும் என்று சொல்லலாம். அவர்கள் இயேசுவின் மூலமாகத் தங்கள் பதவிக்கும் செல்வாக்குக்கும் ஆபத்து வந்து விடும் என்று நினைத்து இயேசுவைக் கொல்ல வகைத் தேடினார்கள். இயேசு இஸ்ரவேலருக்கு ராஜாவாகி ரோமரைத் தோற்கடித்துவிட்டால், தான் நிதி அமைச்சராகிவிடலாம் என்று கனவு கண்ட யூதாசுக்கு பெரிய ஏமாற்றம்.  கிடைக்கிற பணத்தை இப்போது வாங்கிக் கொண்டு இயேசுவிடமிருந்து விலகி விடலாம் என்று முடிவு செய்து கொண்டு அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு இயேசுவோடு உட்கார்ந்திருந்தான். விலையேறப்பெற்ற வாசனைத் தைலத்தை இயேசுவின் மேல் ஊற்றி தன் அன்பை வெளிப்படுத்திய ஸ்திரீயும் (மரியாள் – யோவான் 12:3) இயேசுவின் நினைவில் தான் இருந்திருப்பாள். பஸ்கா பண்டிகையை ஆசரிக்கத் தவறிவிடக் கூடாது என்று நினைத்த சீஷர்களின் மனதையும் இயேசு புரிந்திருந்தார்.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லாவற்றையும் அறிந்த இயேசு, அமைதியாக சாய்ந்திருந்தார். பிதாவாகிய தேவனுடைய சித்தத்துக்கு முற்றிலுமாக ஒப்புக் கொடுத்திருந்த இயேசுவுக்கு பதட்டமடைய வேண்டிய அவசியமில்லை.  நீ எல்லா சூழ்நிலைகளிலும் உன் வாழ்க்கையை முற்றிலுமாக உன் ஆண்டவரிடம் ஒப்புக் கொடுக்கிறாயா?

ஜெபம்

ஆண்டவரே, நீரே எல்லா சூழ்நிலைகளுக்கும் தேவன் என்பதை உணர்ந்து, சமாதானத்தோடு வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.