மாற்கு 14: 22 – 26; யோவான் 13: 1- 17
நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
இயேசு கிறிஸ்து, பஸ்கா பண்டிகையின் போது தம்முடைய சீஷர்களோடு உணவருந்தும்போது, தம்முடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் நினைகூரும்படி அப்பத்தையும் திராட்சரசத்தையும் எடுத்துக் கொடுத்தார். அதை நாம் திருச்சபையில் இன்று வரை திருவிருந்து என்று கடைப்பிடிக்கிறோம். இது கர்த்தர் மீது நாம் முழுமனதோடு அன்பு செலுத்த வேண்டும் என்ற முதலாம் பிராதான கற்பனையை நமக்கு நினைவூட்டுகிறது. ஒருவருடைய கால்களை மற்றொருவர் கழுவுவது, மனத்தாழ்மையைக் கற்றுக் கொடுப்பது மாத்திரமல்லாமல், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள் என்ற இரண்டாவது பிரதான கற்பனையை நினைவூட்டுவதற்காகவும் இயேசு செய்து காட்டிய கட்டளை. ஆனால் அதைச் செய்யும் பழக்கம் நம் திருச்சபைகளில் இல்லை. மனத்தாழ்மையும் நம்மிடமில்லை. ஒருவர் மீது மற்றொருவருக்கு உண்மையான அன்பும் இல்லை. கத்தோலிக்க சபையின் தலைவரான போப் முதல், சீர்த்திருத்த சபைகளின் பேராயர் வரை சபைத் தலைவர்கள் யாரும் இயேசுவின் (வேலைக் காரன்) மாதிரியைப் பின்பற்றவில்லை. நம்மிடமும் சபையில் யார் பெரியவன் என்ற எண்ணம்தான் இருக்கிறது. இந்நிலை மாற வேண்டுமானால், விசுவாசிகள் ஆலயங்களில் ஆராதிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தலைவர்களில்லாத சிறு குழுக்களாகக் கூடி, ஒருவரையொருவர் அறிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் சேவை செய்துகொண்டு, ஜெபத்திலும் ஒருவரையொருவர் தாங்க வேண்டும். செயல்படுங்கள். ஆசீர்வாதம் பெறுவீர்கள்.
ஜெபம்
ஆண்டவரே, நான் பிறருக்கு சேவை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டவன்(ள்) என்ற புரிதலை எனக்குத் தாரும். ஆமென்.