காலைத் தியானம் – ஏப்ரல் 13, 2020

1 இராஜா 17: 7- 9

உன்னைப் பராமரிக்கும்படி ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன்

கேரீத் ஆற்றண்டைக்குப் போக்கும்படி சொன்னது கர்த்தர்தானே. பின் ஏன் அந்த ஆற்றில் தண்ணீர் வற்ற வேண்டும்? கர்த்தர் அதைத் தண்ணீர் வற்றாத நதியாக வைத்திருக்கக் கூடாதா? அல்லது முதலிலேயே சாறிபாத் ஊரிலுள்ள விதவைக்குக் கர்த்தர் கட்டளையிட்டிருக்கலாமே! எலியாவையும் நேராக அங்கே போகச் சொல்லியிருக்கலாமே! இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடையாது. எல்லாவற்றிற்கும் கர்த்தர் குறித்துள்ள நேரம் ஒன்று உண்டென்பது மாத்திரம்தான் நமக்குத் தெரியும். கேரீத் ஆற்றண்டைக்குப் போ என்ற கட்டளை அந்த சில நாட்களுக்குத் தான். அதற்குப் பிறகு கர்த்தரிடமிருந்து வேறே கட்டளை வருகிறது. கர்த்தர் உனக்கோ அல்லது உன் பிள்ளைகளுக்கோ, பல வருடங்களுக்கு முன், வேறே ஊருக்குப் போகும்படி கிரியை செய்திருக்கலாம். அந்த கிரியை தான் உன் வாழ்நாள் முழுவதுக்கும் பொருந்தும் என்று ஏன் நினைக்கிறாய்? கர்த்தரிடத்தில் அனுதினமும் அவருடைய சித்தம் என்ன என்று கேட்டு தெரிந்துகொள். அவர் சொல்லும் இடத்துக்கெல்லாம் போ. உன் தேவைகளையெல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.

ஜெபம்

ஆண்டவரே, உம் சித்தத்தை அறிந்து செயல்படுவது அனுதின வேலை என்பதை எனக்குச் சொல்லிக் கொடுத்ததற்காக நன்றி சுவாமி. ஆமென்.