காலைத் தியானம் – ஏப்ரல் 16, 2020

1 இராஜா 18: 1- 6

நமக்குப் புல் அகப்படுமா என்று பார்

சமாரியா, ஆகாபின் தகப்பனான உம்ரி உருவாக்கிய பட்டணம். அப்பட்டணத்தில் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானவைகள் தான் செய்யப்பட்டன. உம்ரியும் ஆகாபும் அப்பட்டணத்தின் மீது அதிக ஆசையும் நம்பிக்கையும் வைத்திருந்தனர். ஆனால் கர்த்தருடைய ஆசீர்வாதம் அப்பட்டணத்தின் மீது இல்லை. பஞ்சமும் அங்கு மிகவும் கொடியதாயிருந்தது. மூன்று வருட பஞ்சத்துக்குப் பிறகும் ஆகாப், என்றும் மாறாத, என்றும் உயிரோடிருக்கிற, ஆரம்பமும் முடிவும் இல்லாத கர்த்தரை நோக்கித் திரும்பவில்லை. புல் அகப்படுமா என்று ஊர் ஊராகத் தேட புறப்பட்டுவிட்டான்.  இன்றைய நாட்களிலும், மழையை ஆண்டவர் தடுத்து நிறுத்தி நாட்டில் பஞ்சம் ஏற்பட்டால், கழுதைக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்; விஞ்ஞானத்தை நம்பி எதெல்லாமோ செய்கிறார்கள்; ஆனால் கர்த்தரைக் கிறிஸ்தவர்கள் கூட திருபிப் பார்பதில்லை.  இன்று கொரோனா கிருமிகள் உலகத்தையே திகைத்து நிற்க வைத்துவிட்டன. மனிதர்கள் கொரோனாவுக்கு மூல காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்; அந்த கிருமிகள் பரவுவதைத் தடுக்க அநேக முயற்சிகள் எடுக்கிறார்கள். இது தவறல்ல. ஆனால் கர்த்தரை நோக்கிப் பார்க்காமல் எடுக்கும் முயற்சிகள் வீணானவைகளே. நாம் கர்த்தரை நோக்கிப் பார்த்து கெஞ்சுவோம்.  நம்முடைய நாடும், பூமியும் இக்கொடிய நோயிலிருந்து காப்பாற்றப்படும் (2 நாளாகமம் 7:14).

ஜெபம்

ஆண்டவரே, புல்லைத் தேடி ஓடாமல், உம்மைத் தேடி வருகிறோம். இவ்வுலக மக்கள் அனைவர் மீதும் இரங்கி எங்களை இந்த கொடிய நோயிலிருந்து காப்பாற்றும். ஆமென்.