காலைத் தியானம் – ஏப்ரல் 18, 2020

1 இராஜா 18: 16- 18

இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நீயல்லவா?

ஆகாப் எலியாவைச் சந்திக்கப் போனான் என்று பார்க்கிறோம். உலக மரபின் படி எலியாதானே ராஜாவைப் பார்க்க செல்லவேண்டும்? கர்த்தர் எலியா ஆகாபைச் சந்திக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அது எப்படி வேண்டுமானாலும் நிறைவேறும்.  எலியாவால்தான் இஸ்ரவேலர் எல்லா துன்பங்களையும் அனுபவித்தர்கள் என்ற குற்றச்சாட்டை ஆகாப் எலியாவின் மீது சுமத்துகிறான்.  எலியா கொஞ்சமும் தயக்கமில்லாமல், ராஜாவின் மீதுள்ள குற்றத்தைச் சுட்டிக் காட்டி அவரே எல்லா துன்பங்களுக்கும் காரணம் என்று சொல்லுகிறான். இன்று நம் நாட்டிலும் ஓரினச் சேர்க்கையில் தவறில்லை என்று சட்டம் வந்து விட்டது. கருவிலிருக்கும் சிசுவைக் கொல்வதில் தவறில்லை என்றும் சட்டம் சொல்லுகிறது. மனித உரிமை என்ற பெயரில், விபச்சாரத்தில் தவறில்லை என்று சொல்லும் நாடுகளும் இன்று உலகில் இருக்கின்றன.  இப்படி கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானதை நாட்டுச் சட்டங்கள் அனுமதிக்கின்றன. இப்படிப்பட்ட சட்டங்களை ஆதரிப்பவர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று சொல்லி போற்றப்படுகிறார்கள். இவற்றை எதிர்ப்பவர்கள் மனித உரிமையை மதிக்காதவர்கள்; முற்போக்கு சிந்தனையில்லாவர்கள்; பொது இடங்களில் பேசுவதற்கே தகுதியற்றவர்கள் என்று இகழப்படுகிறார்கள். இன்று உலகத்தைக் கலங்கப் பண்ணுகிறவர்கள் யார்?

ஜெபம்

ஆண்டவரே, யார் எனக்கு என்ன பட்டம் கொடுத்தாலும், உம்முடைய கட்டளையை விட்டுக்கொடுக்காத மன தைரியத்தை எனக்குத் தாரும். ஆமென்.