காலைத் தியானம் – ஏப்ரல் 20, 2020

1 இராஜா 18: 22- 28

கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக் கொண்டார்கள்

பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பது பேர் இருந்தார்கள். அவர்கள் காலை முதல் மத்தியானம் வரை பாகாலை நோக்கிக் கூப்பிட்டும், குதித்து ஆடியும், உரத்த சத்தமாய் கூப்பிட்டும் ஒரு பதிலும் இல்லை. ஆகவே அவர்கள் தங்கள் வழக்கப்படியே இரத்தம் வடியுமட்டும் தங்களைத் தாமே கீறிக் கொண்டார்கள்.  “வழக்கப்படியே” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். இப்படிப்பட்ட வழக்கம் நம் நாட்டில் இன்றும் இருக்கிறது. தெய்வத்தின் இரக்கத்தையும் அனுக்கிரகத்தையும் பெற வேண்டுமானால் நம் உடலை நாமே வருத்திக் கொள்ளவேண்டும் என்ற நம்பிக்கை மக்களிடையே பரவலாக இருக்கிறது. உடலில் ஈட்டி, கத்தி போன்றவைகளைக் குத்திக் கொள்பவர்கள் உண்டு. தீயின் மேல் நடக்கிறவர்கள் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் நடந்து சென்றால் புண்ணியம் உண்டு என்ற நம்பிக்கையில் செருப்பு கூட போடாமல் பல கிலோமீட்டர்கள் நடப்பவர்கள் உண்டு. கர்த்தராகிய இயேசு இப்படி எதையும் கேட்கிறதில்லை. விரும்புகிறதுமில்லை. அவருக்கு உன் இருதயம் மாத்திரம் தான் தேவை. நீ இருக்கும் இடத்திலேயே, உன் இருதயத்தை அவரிடம் ஒப்புக் கொடுத்து விடு. அவர் வழி நடத்துவார். பெரிய அதிசயங்களைக் காண்பாய்.

ஜெபம்

ஆண்டவரே, நீர் எதிர்பார்க்கும்படி என் இருதயத்தை முற்றிலுமாக உம்மிடம் கொடுத்துவிட எனக்கு உதவி செய்யும். ஆமென்.