காலைத் தியானம் – மே 1, 2020

1 இராஜா 21: 1- 7

ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது

ஆகாப் ராஜாவுக்கு எவ்வளவு பொன்னும், வெள்ளியும், நிலமும், செல்வமும் இருந்திருக்க வேண்டும்! ஆனால் அவனுடைய மனது அவைகளால் திருப்தியடையவில்லை. அரண்மனைக்கு அருகில் இருந்த நாபோத்தின் தோட்டத்தின் மீது அவன் கண்கள் விழுந்தன. தாவீது ராஜாவின் கண்கள் அவனுடைய அரண்மனைக்கு அருகிலிருந்த பத்சேபாளின் மீது விழுந்தன. கண்களின் இச்சை ராஜாக்களுக்கு மாத்திரமுள்ள விசேஷமான பிரச்சனை அல்ல. அது நம் அனைவரையும் ஆண்டவரை விட்டுப் பிரித்தெடுக்கும் ஒரு பயங்கரமான கண்ணி. ஆகையால் தான் இயேசு கிறிஸ்து, மத்தேயு 6: 29ல் “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால் அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப் போவது உனக்கு நலமாயிருக்கும்” என்று சொல்லுகிறார். யோபுவைப் போல் உன் கண்களோடே உடன்படிக்கை பண்ணிக் கொள் (யோபு 31:1). சோதனை வரும் நேரத்தில் உன் கண்கள் உன் ஆண்டவராகிய இயேசுவின் பக்கமாய் திரும்பி அவர் மீது நிலைத்திருக்கட்டும் (சங்கீதம் 141:8). பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்பது கர்த்தர் கொடுத்த கற்பனை.

ஜெபம்

ஆண்டவரே, இச்சைகளிலிருந்து என் கண்களை விலக்கிக் காரும். என் கண்கள் எப்போதும் உம்மையே நோக்கியிருப்பதாக. ஆமென்.