காலைத் தியானம் – மே 2, 2020

1 இராஜா 21: 8- 16

நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று . . .  சாட்சி சொன்னார்கள்

நாபோத் என்னும் நீதிமானின் தோட்டத்தை இச்சித்தது ஆகாப் ராஜா. கணவனின் இச்சையை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்து நாபோத்துக்கு விரோதமாகப் பொய் சாட்சிகளை ஏற்படுத்தி, நாபோத்தைக் கொலை செய்தது ஆகாபின் மனைவி யேசபேல். 1 இராஜாக்கள் 16ம் அதிகாரம் 29ம் வசனம் முதல் எழுதப்பட்டுள்ள ஆகாபின் சரித்திரத்தைப் பார்க்கும்போது ஆகாபும் யேசபேலும் சேர்ந்து பத்து கற்பனைகளில் ஒன்றைக் கூட மீறாமல் விட்டுவைக்கவில்லை என்றே தோன்றுகிறது. அவர்கள் இரண்டு பேரும், சேர்ந்து பாவம் செய்வதில் ஜாடிக்கேற்ற மூடி என்று நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலமாகக் கர்த்தருக்கு அருவருப்பையும் மிகுந்த கோபத்தையும் உண்டாக்கினார்கள். உன் கணவன் அல்லது மனைவி கர்த்தருக்கு விருப்பமில்லாத காரியத்தை செய்யும்போது அல்லது செய்ய நினைக்கும்போது நீ என்ன செய்கிறாய்? நீயும் அந்த தவறுக்கு உடந்தையாக இருக்கிறாயா? அல்லது இதில் நான் எப்படி தலையிடுவது என்று இருந்துவிடுகிறாயா? அல்லது கர்த்தருக்குப் பிரியமான வழிகளில் நடக்கும்படி ஆலோசனை சொல்லி பரிசுத்தத்திற்கு நேராக வழிநடத்துகிறாயா?

ஜெபம்

ஆண்டவரே, என் குடும்பத்தில் நாங்கள் உமக்குப்பிரியமான வழிகளில் நடக்கும்படி ஒருவருக்கொருவர் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருக்க உதவிசெய்யும். ஆமென்.