காலைத் தியானம் – மே 4, 2020

1 இராஜா 21: 23- 29 

ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா?  

ஆகாபின் சரித்திரத்தை வாசித்து வருகிற நமக்கு, அவன் எவ்வளவு கொடியவன் என்பது நன்றாகத் தெரிகிறது. கர்த்தர் அவனுக்கு எப்படிப்பட்ட தண்டனையைக் கொடுத்தாலும் அது அவனுக்கு வேண்டியதுதான் என்று நமக்குத் தோன்றுகிறது. கர்த்தரோ, கருணை நிறைந்தவர். இரக்கமுள்ளவர்.  எசேக்கியேல் 18: 23ல், துன்மார்க்கன் அழிவதுகூட தமக்குப் பிரியமில்லை என்றும், அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பதே தமக்குப் பிரியம் என்றும் கர்த்தர் சொல்லுகிறார். எசேக்கியேல் 33ம் அதிகாரம் 11ம் வசனத்திலும் அதையே கர்த்தர் மறுபடியும் ஆணையிட்டு சொல்லுகிறார். ஆகாப் மனந்திரும்பி கர்த்தருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தினான். கர்த்தர் மனதிறங்கி அவனுக்கு விதித்த தண்டனையைக் கொஞ்ச காலத்துக்குத் தள்ளி வைக்கிறார்.  அதை அவர் ரத்து செய்யவில்லை. ஆகாபின் மனந்திரும்புதலும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. யேசபேலை அவன் திருமணம் செய்ததினிமித்தம் அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய தன்னை விற்றுப் போட்டான் என்று கர்த்தர் சொல்லுகிறார் (வசனம் 25). இளைஞர்களே, நீங்கள் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம்.

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய கருணை நிறைந்த உள்ளத்தை நான் அலட்சியப் படுத்தாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். என் குடும்பத்திலுள்ள இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தெரிந்து கொள்வதில் உம்மையே நம்பியிருக்க அவர்களுக்கும் எங்களுக்கும் ஞானத்தைத் தாரும். ஆமென்.