காலைத் தியானம் – மே 6, 2020

1 இராஜா 22: 7- 14

மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான் 

மிகாயா “இன்னும் ஒருவன்” அல்ல. அவன் மாத்திரம்தான் கர்த்தருடைய தீர்க்கதரிசி. நானூறு கள்ளத்தீர்க்கதரிசிகள் இருந்த இடத்தில் ஒரே ஒருவன் தான் கர்த்தருடைய தீர்க்கதரிசி. கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆகாப் கேட்க விரும்பியதை ஒரே சத்தத்தில் சொன்னார்கள்.  யோசபாத் அவர்கள் சொல்வதைக் கேட்டவுடனேயே அது உண்மையல்ல என்று தெரிந்து கொண்டான். ஆகையால்தான் அவன், கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே ஒருவரும் இல்லையா என்று கேட்கிறான். மேலும் தனித்திருந்த மிகாயா தீர்க்கதரிசிக்கு, அவனை அழைத்துவந்த ஆள் மூலமாக, கள்ளத் தீர்க்கதரிசிகளோடு ஒத்துப் போய்விடு என்று மறைமுக மிரட்டலும் கொடுக்கப் பட்டது. நீ இப்படிப்பட்ட சூழ்நிலைகளை இன்றும் எதிர்கொள்ளுகிறாயோ? உன் ஆண்டவருக்காக தனித்து நிற்க பயப்படாதே. மிரட்டல்கள் வந்தாலும், உயிரே போகும் நிலை வந்தாலும் உன் ஆண்டவருக்காக நிமிர்ந்து நில்.                        

ஜெபம்

ஆண்டவரே, உலகம் போகிற போக்கிலே போய்விடாமல், உம்முடைய நாமத்தை மகிமைப் படுத்தும்படி சத்தியத்துக்காகவும், நீதிக்காகவும் எப்போதும் உறுதியான நிலையெடுக்க எனக்குப் பெலன் தாரும். ஆமென்.