காலைத் தியானம் – மே 8, 2020

1 இராஜா 22: 24- 30

நான் வேஷம் மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜ வஸ்திரம் தரித்திரும் 

இந்த அதிகாரத்தில் நாம் வாசிக்கும் சரித்திரம், 2 நாளாகமம் 18ம் அதிகாரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஆகாபும், யோசபாத்தும் சீரியாவுக்கு விரோதமாக யுத்தத்திற்கு சென்ற சரித்திரம். கர்த்தருடைய வழிகளில் நடந்தவன் என்று பெயர் எடுத்திருந்த யோசபாத் ஏன் கர்த்தரால் எச்சரிக்கப்பட்ட பின்னும் ஆகாபுடன் சேர்ந்து போருக்குச் சென்றான்? அநேகக் காரியங்களில் யோசபாத் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்தாலும் ஒரு சில காரியங்களில் அவன் சாத்தானோடு சமரசம் செய்து கொண்டான். முதலாவது தன் மகனின் திருமண காரியத்தில் சமரசம்.  2 நாளாகமம் 21: 4-7 வசனங்களை வாசிக்கும்போது, தன் மகனாகிய யோராமை  ஆகாபின் மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தான் என்பதைப் பார்க்கிறோம். திருமணத்தில் ஆரம்பித்த சமரசம் இப்போது யுத்தத்திலும் சமரசம் என்று தொடர்கிறது. கர்த்தருடைய பிள்ளைகள் சாத்தோனோடு எந்த காரியத்திலும் சமரசம் செய்யக் கூடாது. உன் நண்பர்களைப் பிரியப்படுத்தும்படி அல்லது வேலையில் உன் மேலாளரைப் பிரியப்படுத்தும்படி நீ எந்த காரியத்திலாவது சமரசம் (compromise) செய்கிறாயா?                        

ஜெபம்

ஆண்டவரே,  நான் மனிதரைப் பிரியப்படுத்தும்படி எந்த ஒரு காரியத்திலும் உமக்குப் பிரியமில்லாததை செய்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும்.  ஆமென்.