1 இராஜா 22: 31- 39
கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே
கள்ளத் தீர்க்கதரிசிகளின் வாக்கு நிறைவேறவில்லை. ஆகாப் தன் படை வீரர்களின் மீதும், யுத்தக் கூட்டணி மீதும் வைத்திருந்த நம்பிக்கை அவனைக் காப்பாற்றவில்லை. ஆகாப் மிகாயா தீர்க்கதரிசியை சிறையில் அடைத்துவிட்டு, நான் திரும்ப வந்து உன்னை என்ன செய்கிறேன் பார் என்று வீராப்பாகப் பேசும்போது, தன்னுடைய அதிகாரத்தின் மேல் வைத்திருந்த நம்பிக்கை அவனைக் காப்பாற்றவில்லை. இத்தனை ஆண்டுகள் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் சொன்னதையெல்லாம் கேட்காமல் இருந்தும் எனக்கு ஒரு தீங்கும் வரவில்லை; ஆகையால் இந்த முறையும் எனக்கு ஒரு தீங்கும் வராது என்று நினைத்த அகங்காரம் அவனைக் கவிழ்த்துப் போட்டது. கர்த்தருடைய வார்த்தை எப்போதும் நிறைவேறும். இதை வேதாகமத்தில் திரும்பத் திரும்ப பார்க்கிறோம். நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கையிலும் பார்த்திருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையிலும் அனுபவித்திருக்கிறோம். கர்த்தரை மாத்திரம் விசுவாசி.
ஜெபம்
ஆண்டவரே, நீர் வாக்கு மாறாதவர் என்பதை விசுவாசிக்கிறேன். வரப்போகும் நாட்களைக் குறித்து வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று விசுவாசிக்கிறேன். என் வாழ்க்கை அந்த விசுவாசத்தைப் பிரதிபலிப்பதாக. ஆமென்.