காலைத் தியானம் – மே 10, 2020

1 இராஜா 22: 40- 53

ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை      

யோசபாத் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளில் நடந்து, கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் என்று 43ம் வசனத்தில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட நற்சான்றிதழ் பெற்ற பின்னும், மேடைகள் தகர்க்கப்படவில்லை என்பதை ஏன் ஒரு குறையாக வேதாகமம் பதிவு செய்திருக்கிறது? ஆசாவின் நாட்களிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை என்பதை 1 இராஜா 15: 14ல் பார்க்கிறோம். மேலும் 2 இராஜா 12:3; 14:4; 15:4; 15:35 ஆகிய வசனங்களிலும் இதே வார்த்தைகளைப் பார்க்கிறோம். கானானியர் குழந்தைகளைத் தங்கள் தெய்வங்களுக்கு நரபலியாகக் கொடுத்த இடம்தான் இந்த மேடைகள். உபாகமம் 12:1-3 வசனங்களில் கர்த்தர் இஸ்ரவேல் மக்கள் இந்த மேடைகளையும் பலிபீடங்களையும் முற்றிலுமாக அழிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார். உலகமெல்லாம் கர்த்தருடையதுதான் என்றாலும் அசுத்த ஆவிகளுக்குப் பலியிட்டு ஆரதனை செய்த அருவருப்பான இடங்களில் கர்த்தருக்கு ஆராதனை செய்வதை அவர் வெறுக்கிறார்.  உன் வாழ்க்கையிலும் தகர்க்கப்படாத மேடைகள் ஏதாவது உண்டா? தகர்க்கப்படாத மேடைகளை உன் உள்ளத்தில் இருந்தால், இயேசு உன் உள்ளத்திற்குள் வர முடியாது.                        

ஜெபம்

ஆண்டவரே, தகர்க்கப்படவேண்டிய மேடைகள் என்னிடம் இருந்தால் அவற்றை எனக்கு வெளிப்படுத்தும். நான் அவைகளை அழித்துப் போட வேண்டிய பெலனையும் மன உறுதியையும் எனக்குத் தாரும். ஆமென்.