காலைத் தியானம் – மே 11, 2020

2 இராஜா 1: 1- 6

இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா . . . பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப் போகிறீர்கள்? 

அகசியாவின் பெற்றோரான ஆகாப், யேசபேல் நாட்களில்தான் கர்த்தர் எலியாவின் மூலமாக, சகல இஸ்ரவேல் மக்களுக்கும் முன்பாக பெரிய அதிசயத்தைச் செய்தார். எலியா செலுத்தின பலியைக் கர்த்தரிடத்திலிருந்து இறங்கின அக்கினி பட்சித்துப் போட்டது. அதைப் பார்த்த மக்களெல்லாரும் கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்று சொன்னார்கள் (1 இராஜாக்கள் 18ம் அதிகாரம்). ஆனால் ஆகாபும் யேசபேலும் மனந்திரும்பவில்லை. அகசியாவின் வாழ்க்கையிலும் தேவனுடைய வல்லமை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சுகம் கொடுக்கக்கூடிய கர்த்தரை விட்டுவிட்டு, பாகால்சேபூபிடத்தில் குறி கேட்கும்படி ஆட்களை அனுப்புகிறான். அவன் அனுப்பிய ஆட்களோ கர்த்தருடைய செய்தியோடு திரும்பி வந்து விடுகிறார்கள். இன்றும் கர்த்தர் அநேக அதிசயங்களைச் செய்கிறார். அவற்றைப் பார்த்து, அனுபவித்து  அறிந்தவர்களில்கூட பலரும் மனந்திரும்புகிறதில்லை. சாத்தானுக்கு தங்கள் இருதயங்களை விற்றுப் போட்டவர்களின் மனது கல்லாகிவிடுகிறது.  தங்கள் இருதயங்களைக் கல்லாக்கிக் கொண்டவர்கள் யாராவது உனக்குத் தெரியுமானால் கர்த்தருடைய இரக்கத்துக்காக அனுதினமும் ஜெபி.                        

ஜெபம்

ஆண்டவரே, கல்லான இருதயங்களையும் உடைக்கக் கூடியவர் நீர் ஒருவரே. உம்மை விட்டு விலகி நிற்கும் என் நண்பர்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் இரங்கி அவர்களையும் உம் மந்தையிலே சேர்த்துக் கொள்ளும். ஆமென்.