2 இராஜா 2: 4- 6
கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார்
கர்த்தர் எலியாவையும் எலிசாவையும் கில்காலில் ஆரம்பித்து, பெத்தேல், எரிகோ, யோர்தான் என்று அழைத்துக் கொண்டு போனதற்குக் காரணம் உண்டு. இந்த இடங்கள் ஒவ்வொன்றுக்கும், கடந்த காலத்தில் கர்த்தர் செய்த அதிசயங்களை நினைவுபடுத்தும் சரித்திர முக்கியத்துவம் உண்டு. எகிப்திலிருந்து வந்த இஸ்ரவேலர்கள் கானான் தேசத்துக்குள் பிரவேசித்த போது முதலில் பாளயமிறங்கிய இடம் கில்கால். அந்த இடம் புதிய ஆரம்பங்களை நினைவுபடுத்தும் இடம். கர்த்தருடைய வீடு என்றழைக்கப்பட்ட பெத்தேல், அபிரகாமும் யாக்கோபும் கர்த்தரைத் தரிசித்து அவரிடமிருந்து வாக்குத்தத்தத்தைப் பெற்ற இடம். எரிகோவில் தான் யோசுவாவுக்கு முதல் வெற்றி கிடைத்தது. கர்த்தர் யோர்தானின் தண்ணீரைப் பிரிந்து போகப்பண்ணின போது, அதைக் கடந்து வந்து தான் இஸ்ரவேல் மக்கள் அவர்களுக்கு சுதந்தரிக்கக் கொடுக்கப்பட்ட தேசத்தில் அடியெடுத்து வைத்தார்கள். கர்த்தர் இப்படிப்பட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களில் மாத்திரம் வசிக்கிறவர் அல்ல. ஆனால் இந்த பயணத்தின் மூலமாக எலிசாவுக்கு கர்த்தர் செய்த சகல நன்மைகளும், கர்த்தர் யார் என்பதும் நினைவு படுத்தப் பட்டன. உன் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட இடங்களும் அனுபவங்களும் உண்டா? அவைகள் உன் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் தெரியுமா?
ஜெபம்
ஆண்டவரே, உம்மோடு நெருங்கி வாழ்வதின் மூலமாக நான் பெற்றுக் கொண்ட அனுபவங்களை எனக்குப் பின்வரும் தலைமுறையினருக்குச் சொல்லிக் கொடுக்கும் மனதையும், ஞானத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.