2 இராஜா 4: 1- 7
வேறே பாத்திரம் இல்லை என்றான்
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு, தேசத்தையும் சபையையும் குறித்த அக்கறை வேண்டும். அதற்கு மேலாக தனிப்பட்ட ஒருவனை அல்லது ஒருத்தியைக் குறித்த கரிசனையும் இருக்கவேண்டும். எலிசா அதற்கு ஒரு நல்ல முன்மாதிரி. கர்த்தருடைய ஆசீர்வாதம் அநேகத் தருணங்களில் உன் கையில் இருப்பவைகளில் இருந்துதான் ஆரம்பிக்கும். மோசேயின் கையிலிருந்த கோல், பேதுருவின் கையிலிருந்த மீன்பிடிக்கும் வலை, சிறுவனின் கையிலிருந்த ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் – இப்படி கர்த்தர் உபயோகித்தவைகளின் உதாரணங்கள் அநேகம் நமக்குத் தெரியும். இன்று வாசித்த பகுதியில் குறிப்பிட்டுள்ள ஏழை விதைவையின் ஆசீர்வாதமும் அவள் கையிலிருந்த பாத்திரங்களைக் கொண்டுதான் செய்யப்பட்டது. அது மாத்திரம் அல்ல, அவள் கையிலிருந்த பாத்திரங்கள்தான் அவள் பெற்ற ஆசீர்வாதத்தின் அளவை நிர்ணயித்தது. உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது (மத்தேயு 9:29) என்று இயேசு கிறிஸ்து சொன்னது நம் நினைவுக்கு வருகிறதல்லவா? அந்த ஏழை விதவையின் தேவைகளையெல்லாம் கொடுத்த நம் ஆண்டவருக்கு உன் தேவைகளும் தெரியும். நீ விசுவாசி.
ஜெபம்
ஆண்டவரே, என்னுடைய தேவைகளுக்கும் நான் உம்மையே நம்பியிருக்கிறேன். என் விசுவாசத்தை உறுதிப்படுத்தும். ஆமென்.