2 இராஜா 4: 18 – 28
கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்து வைத்தார்
சூனேமியாளின் மகன் எப்படி மரித்தான் என்று சொல்லப்படவில்லை. அந்த சிறுவனின் மரணம் சூனேமியாளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். அந்த அதிர்ச்சியின் மத்தியிலும் அவள் என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாள். சிறுவன் மரித்தான் என்பதை ஒருவருக்கும் சொல்லாமல் நேராக எலிசாவைப் போய் பார்க்க முடிவு செய்தாள். மகனை மேலறையில் இருக்கும் எலிசாவின் படுக்கையில் படுக்க வைத்து விட்டு எலிசாவைப் பார்க்க விரைகிறாள். சூனேமிலிருந்து கர்மேல் பர்வதம் கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. எலிசாவின் காலைப் பிடித்துக் கொண்டவளின் துக்கத்தைக் கண்ட எலிசா, ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாலும், கர்த்தர் அதை அவனிடமிருந்து மறைத்து வைத்தார் என்பதை உணர்ந்தான். இன்றும் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். திருச்சபைக்குத் தேவையான பல காரியங்களைக் கர்த்தர் அவர்கள் மூலமாக வெளிப்படுத்துகிறார். ஆனால் எல்லாவற்றையும் அறிந்தவர் கர்த்தர் ஒருவரே.
ஜெபம்
ஆண்டவரே, தீர்க்கதரிசிகள் மூலமாகவும், உம்முடைய ஊழியர்களின் மூலமாகவும் என்னோடு பேசுவதற்காக நன்றி சுவாமி. ஆனால் நான் ஒருபோதும் உமக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடாதபடி எனக்கு ஞானத்தைத் தாரும். ஆமென்.