2 இராஜா 6: 8 – 12
எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு
அந்த நாட்களிலே இஸ்ரவேலரில் அநேகர் கர்த்தருக்குப் பிரியமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். கர்த்தரைப் புறக்கணித்தார்கள். ஆனாலும் கர்த்தர் அவர்களை மறக்கவில்லை. சீரியாவின் ராஜா, தன்னுடைய நெருங்கிய ஊழியக்காரரோடே ஆலோசனை பண்ணுவதெல்லாம் இஸ்ரவேலின் ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவை எப்படி இஸ்ரவேலின் ராஜாவுக்குத் தெரிந்துவிடுகிறது என்பது தெரியாமல் சீரியாவின் ராஜா குழப்பத்தில் இருந்தான். தன்னுடைய நெருங்கிய உள் வட்டத்துக்குள் ஒரு துரோகி இருக்கிறான் என்றே நினைத்தான். ஆனால் சீரியா ராஜாவின் ஊழியர்களில் ஒருவனுக்கு, எலிசாதான் இஸ்ரவேலின் ராஜாவுக்கு ராணுவ இரகசியங்களை அறிவிக்கிறவன் என்பது தெரிந்திருந்தது. ஆம், கர்த்தர் எலிசாவின் மூலமாக சீரியாவின் ராஜாவின் சிந்தனைகளையும் ஆலோசனைகளையும் இஸ்ரவேலரின் ராஜாவுக்குத் தெரியப்படுத்தினார். கர்த்தருக்கு உன் செயல்கள் மாத்திரமல்ல, உன் சிந்தனைகளும் தெரியும் (சங்கீதம் 139: 1-4).
ஜெபம்
ஆண்டவரே, என் எண்ணங்கள் எப்பொழுதும் உமக்குப் பிரியமானவைகளாக இருப்பதாக. ஆமென்.