காலைத் தியானம் – ஜூன் 04, 2020

2 இராஜா 6: 18 – 23   

அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி 

எலிசா தன்னைக் கொல்ல வந்த சீரியாவின் இராணுவ வீரர்களுக்குக் கண்மயக்கம் ஏற்படுத்தி சமாரியாவுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே அவர்களை யோராம் ராஜாவின் முன் கொண்டுபோய் நிறுத்தினான்.  ராஜா அந்த இராணுவ வீரர்களைப் போரில் கைதிகளாகப் பிடிக்கவில்லை. போரில் கைப்பற்றியிருந்தால் அவர்களைக் கொன்று போடுவதற்கு ராஜாவுக்கு அதிகாரம் உண்டு. இவர்களோ எலிசாவால் கொண்டு வரப்பட்டவர்கள். ஆகையால் ராஜா அவர்களைக் கொன்று போடுவதற்கு எலிசாவிடம் அனுமதி கேட்கிறான். எலிசாவோ அவர்களைத் தன் விருந்தினர்களாகப் பாவித்து, ராஜாவின் மூலமாகப் பெரிய விருந்து கொடுத்து அனுப்புகிறான்.  ஒருவேளை அந்த இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்தால், பெனாதாத் என்று அழைக்கப்பட்ட சீரிய ராஜா, மறுபடியும் வேறே ஒரு படையை அனுப்பியிருப்பான். சண்டை தொடர்ந்துகொண்டே இருந்திருக்கும். தீமைக்குப் பதிலாக நன்மை செய்ததினாலே சமாதானம் உண்டாயிற்று.  உன் குடும்பத்திலும், உன் அன்றாட வாழ்க்கையிலும் தீமைக்குத் தீமை செய்யாதே. தீமைக்குப் பதிலாக நன்மை செய்.

ஜெபம்

ஆண்டவரே, தீமைக்குப் பதிலாக நன்மை செய்வதற்கு வேண்டிய அன்பையும், மனப் பக்குவத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.