காலைத் தியானம் – ஜூன் 05, 2020

2 இராஜா 6: 24 – 33    

இந்த பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது  

சீரியாவின் ராஜா, அதிகக் காலம் சமாதானத்தைக் கடைப்பிடிக்கவில்லை. முழு ராணுவத்துடன் போய் சமாரியாவை முற்றுகையிட்டான். அந்த முற்றுகை அநேக நாட்கள் நீடித்ததால், தேசத்தில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று. அந்த பஞ்சமும் பொல்லாப்பும் கர்த்தர் அனுமதித்தது என்பதை இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் உணர்ந்தான். இருந்தாலும், அந்த நிலைக்கு அவன் பொறுப்பேற்கவில்லை. தன் ஜனமாகிய இஸ்ரவேலர் மனந்திரும்ப வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. மனமாற்றமும், மனத் தாழ்மையும் இல்லாமல் உடைகளைக் கிழித்துக் கொண்டு, சாக்குத் துணியால் தன்னைச் சுற்றிக் கொள்வதால் என்ன உபயோகம்? ஒருவேளை யோராம், தன் ஜனங்களுக்கு மனந்திரும்பி கர்த்தரிடம் மன்னிப்பு கேட்கும்படி அழைப்பு கொடுத்திருந்தால், சரித்திரமே வித்தியாசமாக இருந்திருக்கும் அல்லவா? இன்று உலக நாடுகள் அனைத்தும் கொரோனா என்னும் கொடிய கிருமியின் பிடியில் இருக்கின்றன. இது கர்த்தர் அனுமதித்துள்ள கொடூரம் என்பதை நாம் உணருகிறோமா? நாமும் தனிநபராகவும், திருச்சபையாகவும், நாட்டு மக்களாகவும், உலக மக்களாகவும் நம்மைத் தாழ்த்தி, மனந்திரும்பி, கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்டால், நாம் அனைவரும் சுகம் பெற்று இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் பெறுவோம் என்பது நிச்சயம் (2 நாளாகமம் 7: 14).      

ஜெபம்

ஆண்டவரே, இன்று உலகம் முழுவதையும் முடக்கிவிட்ட இந்த கொரோனா கொடூரத்துக்கு என்னுடைய பாவ வாழ்க்கையும் காரணம் என்பதை உணருகிறேன். என்னை மன்னித்து என்னையும் என் நாட்டு மக்களையும் தயவாய் காப்பற்றும்.   ஆமென்.