2 இராஜா 7: 1 – 7
தங்கள் பிராணன் மாத்திரம் தப்பும்படி ஓடிப் போனார்கள்
யோராம் ராஜாவிடம் மனமாற்றம் இல்லை. இஸ்ரவேல் மக்களிடமும் மனமாற்றம் இல்லை. இருந்தாலும் கர்த்தர் இஸ்ரவேலரோடு தான் செய்திருந்த உடன்படிக்கையை மறக்கவில்லை. அவர், அடுத்த இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் நடக்கப் போகும் அற்புதத்தை எலிசாவின் மூலமாக அறிவிக்கிறார். அதை ராஜாவின் பிரதானி விசுவாசிக்கவில்லை. மேலும் அதைக் குறித்து அவன் கிண்டலாகப் பேசுகிறான். அதற்குரிய தண்டனையும் உடனேயே அறிவிக்கப்படுகிறது. கர்த்தர் ஏற்படுத்திய அற்புத சத்தம் சீரியரை முறியடித்தது. ஏற்கனவே 2 இராஜாக்கள் 3ம் அதிகாரத்தில் கர்த்தர் ஏற்படுத்திய அற்புத காட்சி மோவாபியரை முறியடித்தது என்று பார்த்தோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்றும் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் அநேக அற்புதங்களைச் செய்து கொண்டேயிருக்கிறார். நீ அதை விசுவாசிக்கிறாயா? விசுவாசத்துடன் அவரிடம் கேட்டால், நீயும் அற்புதங்களைக் காண்பாய்.
ஜெபம்
ஆண்டவரே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். என் வாழ்க்கையிலும் அற்புதங்களைச் செய்யும். ஆமென்.