காலைத் தியானம் – ஜூன் 09, 2020

2 இராஜா 8: 1 – 6   

தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிட்டாள்   

2 இராஜாக்கள் 4ம் அதிகாரத்தில் நாம் வாசித்து தியானித்த சூனேமியாள் சரித்திரத்தின் தொடர்ச்சியை இன்று பார்க்கிறோம்.  அவள் கர்த்தரிடம் மாத்திரமல்ல, மனிதரின் கண்களிலும் தயவு பெற்றிருந்தாள். அவள் தன் வாழ்க்கையில் கர்த்தரைப் பற்றிய மூன்று உண்மைகளை அறிந்து கொண்டாள். முதலாவது உண்மை, கர்த்தரே மரணத்துக்கும் ஜீவனுக்கும் அதிபதி. தன் மகனுடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலம் சூனேமிய பெண் இதை அனுபவப்பூர்வமாக அறிந்திருந்தாள். இரண்டாவதாக, கர்த்தரே இயற்கையின் அதிபதி. இயற்கையின் சக்தியையும் அதின் நேர்த்தியையும் பார்த்து மனிதன் இன்று இயற்கையைக் கடவுளாக வணங்குகிறான். கர்த்தரோ இயற்கையை உருவாக்கியவர் மாத்திரமல்ல, அதின் ஒழுங்குமுறைகளை மாற்றவும் வல்லமை கொண்டவர். அவர் வார்த்தைக்கு சூரியனும் சந்திரனும் காற்றும் மழையும் கட்டுப்படுகின்றன. ஏழு வருட பஞ்சத்தைக் குறித்த முன்னறிவிப்பும், அதற்குத் தப்பிய அனுபவமும் சூனேமியாளுக்கு உண்டே!   மூன்றாவதாக, கர்த்தரே தம்முடைய பிள்ளைகளின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளுக்கு அதிபதி. கர்த்தருக்குப் பயந்து அவருடைய வழிகளில் நடக்கிறவனின் அன்றாட வாழ்க்கையைக் கர்த்தர் வழிநடத்துகிறார். சூனேமியாளுக்கு அவளுடைய வீடும், வயலும், வயலின் ஏழு வருட வருமானமும் திரும்பக் கிடைத்தன.  உன் வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கெல்லாம் கர்த்தராகிய இயேசு அதிபதியாக இருக்கிறாரா?

ஜெபம்

ஆண்டவரே, என் வாழ்க்கையின் எல்லா பகுதிகளுக்கும் நீரே அதிபதியாக இருக்கும்படி உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன். என் மீது இரக்கமாயிரும். ஆமென்.