காலைத் தியானம் – ஜூன் 10, 2020

2 இராஜா 8: 7 – 15        

நான் இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா?   

கடந்த காலத்தில் எலிசாவின் மூலமாக சீரியாவிற்கு அநேகத் தடைகளும் இராணுவப் பின்னடைவுகளும் ஏற்பட்டிருந்தன. நாகமானின் குணமடைதல், சீரிய போர் வீரர்களுக்கு விருந்து கொடுத்து அனுப்புதல் போன்ற நன்மைகளும் அவன் மூலமாக நடந்திருந்தன. இருந்தாலும் சீரியா இஸ்ரவேலுக்கு எதிரி. எலிசா தமஸ்குவுக்குப் போகிறது அவனுடைய விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டுகிறது. பிற தெய்வங்களை வழிபடும் பெனாதாத், யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய எலிசாவிடம் வந்து தன் உடல்நிலையைக் குறித்து கேட்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் அவன் தன்னை எலிசாவின் குமாரன் என்று சொல்லுகிறான். பெனாதாத்திடம் ஏன் இந்த மாற்றம்? நாகமான் குணமடைந்ததும் அவன் கர்த்தரையே சேவிக்க எடுத்துக் கொண்ட முடிவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமான காரணம் அவனுடைய நம்பிக்கையற்ற உடல் நிலை என்றே சொல்ல வேண்டும். இன்றும் அநேகர் “வேறே வழியில்லை” என்ற நிலை வந்தவுடன்தான் கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார்கள்.  அப்படிப்பட்டவர்களையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே கொடுக்கக் கூடிய இரட்சிப்புக்கு நேராக வழி நடத்துவது நம் கடமை.  கர்த்தர் அவர்களுக்கும் இரக்கம் காட்டுவார்.         

ஜெபம்

ஆண்டவரே, தாங்க முடியாத துன்பத்தின் மத்தியில் உம்மை நோக்கிப் பார்க்கும் என் நண்பர்களையும் சகோதர சகோதரிகளையும் கண்ணோக்கிப் பார்த்து அவர்களுக்கு இரங்கும். ஆமென்.