காலைத் தியானம் – ஜூன் 11, 2020

2 இராஜா 8: 16 – 29           

அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்   

இந்த இராஜாக்களின் புத்தகத்தை எழுதியவர், இஸ்ரவேலரின் (அதாவது 10 கோத்திரத்தாரின்) சரித்திரத்திலிருந்து மறுபடியும் யூதாவின் (அதாவது 2 கோத்திரத்தாரின்) சரித்திரத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். தாவீதின் வம்சத்தைப் பாதுகாக்கும்படி கர்த்தர் யூதா கோத்திரத்தை வழிநடத்தி வந்தார். யோசபாத்தின் குமாரனான யோராமோ தன்னுடைய சிறந்த முன்னோர்களான தாவீது, ஆசா, யோசபாத் ஆகியோரின் முன்மாதிரியைப் பின்பற்றாமல், ஆகாப் – யேசபேல் ஆகியோரின் வழிகளைப் பின்பற்றினான். சாத்தான் விரித்த வலையில் சிக்கிக் கொண்டான். ஆகாப், யேசபேல் ஆகியோரின் மகளான அத்தாலியாள் என்பவளைத் திருமணம் செய்து கொண்டதுதான் அதற்கு முக்கிய காரணம். இளைஞர்களே, நான் அடிக்கடி சொல்லிவரும் ஆலோசனையை மறுபடியும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.  கர்த்தரிடம் கேட்டு அவர் காட்டும் வாழ்க்கைத் துணையைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். கர்த்தருக்காகக் காத்திருந்தால் அவர் நிச்சயமாக வழி நடத்துவார். அழகு, பணம், செல்வாக்கு போன்றவைகளின் அடிப்படையில் வாழ்க்கைத் துணையை நீங்களாகத் தெரிந்துகொண்டு, உங்கள் திருமண வாழ்க்கையைக் கர்த்தர் ஆசீர்வதிக்கவேண்டும் என்று ஜெபிப்பது அர்த்தமற்ற காரியம்.        

ஜெபம்

ஆண்டவரே, திருமண காரியத்தில் நீர் காட்டும் வாழ்க்கைத் துணைக்காகக் காத்திருக்க எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஞானத்தையும் பொறுமையையும் தாரும். ஆமென்.