2 இராஜா 9: 1 – 13
யெகூ ராஜாவானான் என்றார்கள்
ஒரு சில நிமிடங்களுக்கு முன் வரை யெகூ இஸ்ரவேலரின் படைத் தலைவன். திடீரென இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டுவிட்டான். யெகூவுக்கு அது திடீரென நடந்துவிட்ட சம்பவம். ஆனால் கர்த்தருடைய திட்டத்தில் இது எலியாவே செய்திருக்கவேண்டிய அபிஷேகம். 1 இராஜாக்கள் 19ம் அதிகாரத்தில் கர்த்தர் எலியாவிடம் மூன்று பேரை அபிஷேகம்பண்ணும்படி சொல்லுகிறார். முதலாவதாக ஆசகேலைச் சீரியாவின் ராஜாவாக அபிஷேகம்பண்ண வேண்டும்; இரண்டாவதாக யெகூவை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம்பண்ணவேண்டும். மூன்றாவதாக எலிசாவை எலியாவின் இடத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணவேண்டும். எலியா மூன்றாவது அபிஷேகத்தை மாத்திரம்தான் செய்திருந்தான். யெகூவின் அபிஷேகம் இப்போதுதான் நிறைவேறுகிறது. உன் வாழ்க்கையிலும் உனக்குத் திடீரென ஒரு புதிய பொறுப்பு கொடுக்கப்படலாம். அல்லது திடீரென ஒரு இட மாற்றம் வரலாம். உனக்குத்தான் அது திடீரென்று வந்த காரியம். கர்த்தருடைய திட்டத்தில் அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான். ஆகையால் கர்த்தர் திறக்கும் வாசலின் வழியாகப் பிரவேசிக்க தயங்காதே.
ஜெபம்
ஆண்டவரே, என் வாழ்க்கை முழுவதையும் நீர் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்கிறீர் என்பதை உணருகிறேன். நீர் காட்டும் பாதையில் தைரியமாகச் செல்ல எனக்கு உதவி செய்யும். ஆமென்.
