காலைத் தியானம் – ஜூன் 13, 2020

2 இராஜா 9: 14 – 37           

யெகூ இரதத்தின் மேல் ஏறி யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான்  

இன்று வாசித்த வேத பகுதி, இனிமையான பகுதி அல்ல. கர்த்தர் நியாயந்தீர்க்கும்போது, அவருக்கு விரோதமாகச் செயல்படுபவர்களுக்கு ஏற்படும் பயங்கரத்தைப் படம்பிடித்துக் காட்டும் பகுதி. ஆகாபின் குடும்பத்தை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பதுதான் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்ட யெகூவிற்குக் கொடுக்கப்பட்ட முதல் வேலை.  ஆகையால் அவன், தான் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட செய்தி யெஸ்ரயேலுக்குப் போய்ச் சேருவதற்கு முன், தான் அங்கே போய்ச் சேர வேண்டுமென்று விரும்பினான். ஆகையால் அவன் உடனே இரதத்தில் புறப்பட்டது மாத்திரமல்லாமல், அதிவேகமாய் இரதத்தை ஓட்டினான் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகாபும் அவன் மனைவி யேசபேலும் செய்திருந்த அவலட்சணங்கள் அனைத்தையும், கர்த்தர் எலியா தீர்க்கதரிசி மூலமாக அறிவித்திருந்த தண்டனைகளின் விவரங்களையும், யெகூ நன்றாக அறிந்திருந்தான். கர்த்தர் நமக்குக் கொடுக்கும் வேலையைக் காலதாமதமின்றி, சாக்கு போக்கு சொல்லாமல், உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதே யெகூவின் செயல்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய முக்கிய பாடம்.

ஜெபம்

ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுக்கும் வேலைகளைக் கால தாமதமின்றி உடனேயே நிறைவேற்ற வேண்டிய ஞானத்தையும், மன உறுதியையும் தாரும். ஆமென்.