காலைத் தியானம் – ஜூன் 16, 2020

2 இராஜா 10: 29 – 36            

உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள்             

யெகூவிடம் மூன்று விதமான குணங்களைப் பார்க்கிறோம். முதலாவது அவன் கர்த்தர் கொடுத்த கட்டளையை நிறைவேற்றினான். இரண்டாவதாக அவன் தன் எல்லையை மீறி கர்த்தர் சொல்லாததையெல்லாம் செய்தான். அப்படிச் செய்வதற்கு பொய் சொல்லவும் ஏமாற்றவும் அவன் தயங்கவில்லை. மூன்றாவதாக அவன் கர்த்தர் வெறுக்கிற விக்கிரக வழிபாட்டில் ஈடுப்பட்டான். பெத்தேலிலும் தாணிலும் யெரொபெயாம் ஏற்படுத்திய பொற்கன்றுகுட்டிகளை விட்டு யெகூ விலகவில்லை.  ஒருவேளை அந்த பொன்னால் செய்யப்பட்ட கன்றுகுட்டிகள் யெகோவாவைத் தான் நினைவு படுத்துகின்றன என்று யெகூவும் மற்றும் அநேக இஸ்ரவேலரும் நினைத்திருக்கலாம். இருந்தாலும் விக்கிரக ஆராதனையைக் கர்த்தர் வெறுக்கிறார். இன்றும் இயேசுவுக்குச் சிலை வைத்து வழிபடுவதைக் கர்த்தர் வெறுக்கிறார். கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ததற்கு யெகூவின் நான்கு தலைமுறையினருக்கு இஸ்ரவேலின் சிங்காசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்யும் ஆசீர்வாதம் கொடுக்கப்பட்டது. கர்த்தருக்குப் பிரியமில்லாதவைகளைச் செய்ததற்கு யெகூ பல போர்களையும் தோல்விகளையும் சந்திக்க வேண்டியதிருந்தது.                         

ஜெபம்

ஆண்டவரே, உமக்குப் பிரியமானவைகளை மாத்திரம் செய்யும் நல்மனதை எனக்குத் தாரும். ஆமென்.