காலைத் தியானம் – ஜூன் 17, 2020

2 இராஜா 11: 1 – 12                

கிரீடத்தை அவன் மேல் வைத்து .  . . அவனை ராஜாவாக்கி                  

கர்த்தருடைய வாக்கின்படி கிரீடம் தொடர்ந்து தாவீதின் வம்சத்தில் இருக்கவேண்டும். அந்த வம்சத்தில்தான் இயேசு கிறிஸ்துவும் மேசியாவாக பூமியில் தோன்றுவார் என்பது தீர்க்கதரிசனம். சாத்தான் அதை முறியடிக்க எல்லாவற்றையும் செய்தான். யூதாவின் ராஜாவாகிய யோராமின் மனைவி அத்தாலியாள், தன் மகனும், தன் தகப்பன் வீட்டாரும் கொல்லப்பட்டவுடன், யூதாவின் அரசாட்சியைத் தன் கையில் எடுத்துக் கொண்டு, பழி வாங்கும் நோக்கத்தோடு தாவீதின் வம்சத்தார் யாவரையும் அழிக்க முடிவெடுக்கிறாள். அவள் கிட்டத்தட்ட அனைவரையும் கொன்றுவிட்ட நிலையில், கர்த்தருடைய கரம் அகசியாவின் 1 வயது மகனான யோவாஸ் என்பவனோடு இருக்கிறதைப் பார்க்கிறோம். யூதாவில் கர்த்தருடைய பிள்ளைகள் யாருமே இல்லையே என்று நினைக்கும் நேரத்தில், அகசியாவின் சகோதரியான யோசபாள், ஆசாரியனான யோய்தா, யோவாசின் தாதி ஆகியோர் இரகசியமாய் செயல்பட்டு, யோவாசைக் காப்பாற்றி வளர்த்து வருகிறார்கள். ஏழு வயதிலேயே அவன் யூதாவின் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படுகிறான். இன்றும் கர்த்தரிடத்தில் உண்மையுள்ள ஒரு சிறிய கூட்டம் இருந்தால், அவர் உலகத்தையே தலைகீழாக மாற்றிவிடுவார். உன்னைக் கர்த்தர் நம்பலாமா?                                      

ஜெபம்

ஆண்டவரே, யோசபாளைப் போல, யோய்தாவைப் போல, நானும் ஆபத்துக்களின் நடுவிலும் உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன். என்னையும் உபயோகியும். ஆமென்.